ஊக்கமளிக்கும் ராகி…!!!

Spread the love

ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். அரிசி உணவில், நெல்லை அரிசியாக மாற்றும் போது அதன் சத்துகள் அனைத்தும் தவிட்டிலும், உமியிலும் போய் விடுகிறது. ஆனால் ராகியிலோ அப்படியில்லை. ராகியை அப்படியே அரைத்து அதனை மாவாக உபயோகிக்க வேண்டும். தவிடு, உமி என்று பிரிக்க முடியாது. பலர் ராகி களி சிறைச்சாலைகளில் கொடுக்கும் உணவு என்று கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். ராகியில் உள்ள சத்துக்கள், அரிசியில் உள்ள சத்துக்களை விட அதிகமானதாகும். ராகியின் குணங்களை பட்டியலிட்டு பார்ப்போமேயானால், அதன் பலனை தெரிந்து கொள்ளலாம்.

ராகியில் உள்ள சத்துக்கள்

புஷ்டி-7.1%,
கொழுப்பு-1.29%,
உலோகம்-2.24%,
கால்ஷியம்-0.334%,
பாஸ்பரஸ்-0.272%,
அயன்-5.38%,
விட்டமின் ஏ-70.

அரிசியில் உள்ள சத்துக்கள்

புஷ்டி-6.85%,
கொழுப்பு-0.55%,
உலோகம்-0.05%,
கால்ஷியம்-0.007%,
பாஸ்பரஸ்-0.108%,
அயன்-1.02%,
விட்டமின் ஏ-0.

ராகியின் பயன்கள்:

ரத்தம் சுத்தியாகும்
எலும்பு உறுதிப்படும்
சதை வலுவாக்கும்

மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.
தென்னிந்தியர் தாங்கள் தான் அந்தஸ்து, நாகரீகம், வாய்ந்தவர்களென்று கொண்டு நம்பர் ஒன் வெண்மை அரிசியைச் சாப்பிடுகிறார்கள். ராகி விலை மலிவான உணவு என்று கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். ராகியின் விலையைப் பார்க்காமல், அதன் பலனைப் பார்க்க வேண்டும்.

‘ராகி’ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் மாதம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் களி ஒன்று தான் செய்ய முடியும் என்றில்லை. ராகியில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

ராகி பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

பால் – 4-5 கப்
சர்க்கரை – 1 கப்
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

கொழுக்கட்டைக்கு…

ராகி மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
பால் – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை நீர் போன்று கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் அதை ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி, நெய் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியில் பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் ராகி உருண்டைகளை சேர்த்து 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, 15 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.

ராகி இட்லி

தேவை

புழுங்கலரிசி-2கப்
ராகி-1கப்
வெந்தயம்-10கிராம்
உளுந்து-1கப்
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை

அரிசி, வெந்தயம், ராகி இம்மூன்றையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்)
உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும்.
உளுந்து அரைத்து எடுத்ததும் ராகி, அரிசி கலவையை தனியாக கரகரப்பாக அரைக்கவும்.
கடைசியில் உப்பு, அரைத்த உளுந்து கலந்து எடுத்து மறுநாள் காலை வரை (பொங்கி வருவதற்கு) வைக்கவும்.
மற்ற இட்லிகளைப் போல ஆவியில் வேக வைக்கவும்.

ராகி உளுந்து தோசை

தேவை

ராகி மாவு-4கப்
வெள்ளை உளுந்து-1கப்
உப்பு-தேவைக்கேற்ப
புளித்த தயிர்-மாவு ஊறவைக்கத் தேவையான அளவு

செய்முறை

உளுந்தை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ராகி மாவை லேசாகப் புளித்த கட்டித் தயிரில் கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நுரைக்க அரைத்து கடைசியில் ஊற வைத்த மாவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் அரைத்தெடுக்கவும்.
பெரிய பாத்திரத்தில் எடுத்து, மாவு பொங்கி வருவதற்காக மறுநாள் காலை வரை மூடி வைக்கவும்.
மறுநாள் நன்றாகக் கலந்து விட்டு மசால் தோசை போல மத்தியில் சட்டினி பூசி, ஏதாவது மசாலா வைத்து பரிமாறலாம்.
வெங்காயம் தூவி ஊத்தப்பம் போலவும் ஊற்றலாம்.

ராகி அடை

தேவை

ராகி மாவு-2கப்
சோயா மாவு-1/4கப்
தண்ணீர்-21/2கப்
எண்ணெய்-சுடுவதற்கு
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது-11/2 டீஸ்பூன்
உருவிய முருங்கை இலை-1/2கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/2கப்

செய்முறை

தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி உப்பு சேர்த்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
நன்றாகக் கொதிக்கும் போது, தணலைக் குறைத்து மாவைக் கொட்டி கிளறி உடனே அடுப்பில் இருந்து கீழே இறக்கவும்.
கை பொறுக்கும் சூடு வரும் போது தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும்.
அதோடு இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, முருங்கை கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எலுமிச்சையளவு மாவை எடுத்து ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி அடை போல் தட்டி கல்லிலே போட்டு இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ராகி பயத்தம் பருப்பு காரப் புட்டு

தேவை

ராகி மாவு-1கப்
பயத்தம் பருப்பு-2டே.ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்-2டீஸ்பூன்
சிகப்பு மிளகாய்-2
கடுகு-1/2டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி-1டே.ஸ்பூன்

செய்முறை

ராகி மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொஞ்சமாகத் தெளித்து பிசறவும்.
இதை பெரிய கண் உடைய சல்லடையில் சலிக்கவும்.
குக்கரின் உள்ளே ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு மேலே மெல்லிய துணியை கட்டி அதில் மாவை பரவலாகப் பரப்பி வைக்கவும். (இட்லி கொப்பரையில் நேரடியாக துணியைக் கட்டியும் வைக்கலாம்)
ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் கைகளால் நன்றாக உதிர்த்து விடவும்.
பயத்தம் பருப்பை குழையாமல் வேக வைத்து வடித்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சிகப்பு மிளகாய் தாளித்து வேக வைத்து வடித்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சிகப்பு மிளகாய் தாளித்து வேக வைத்த பருப்பு, ராகி மாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு எடுக்கவும். கொத்தமல்லி தழையை மேலே பரவலாகத் தூவி பரிமாறவும்.

ராகி இடியாப்பம்

தேவை

ராகி மாவு-1கப்
கோதுமை மாவு-1கப் (ஆவியில் வேக வைத்தது)
கடலை மாவு-1/4 கப்
உப்பு-தேவைக்கேற்ப
சுடுதண்ணீர்-மாவு பிசைய

செய்முறை

கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் தனித்தனியே லேசாக வறுக்கவும்.
வறுத்த மாவுகளோடு கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான சுடு தண்ர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
இடியாப்பக் குழலில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் நிரப்பி இடியாப்பத் தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும். (3 நிமிடங்கள்)
காய்கறி மசாலாவோடு சூடாகப் பரிமாறவும்.

ராகி ரொட்டி

தேவை

ராகி மாவு-2கப்
நீர்த்த புளிக்கரைசல்-2கப்
பச்சை மிளகாய்-4
உப்பு-தேவைக்கேற்ப
முருங்கைக் கீரை உருவியது-1/2கப்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1டீஸ்பூன்
தாளிக்க எண்ணெய்-2டீஸ்பூன்
எண்ணெய்-சுடுவதற்கு

செய்முறை

ஒரு வாணலியில் புளிக் கரைசலை அளந்து ஊற்றி அதில் உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.
கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி மாவைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறவும்.
மறுபடியும் அடுப்பின் மேல் வைத்து 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக வைக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டவும்.

முருங்கைக் கீரையை உருவி சேர்க்கவும்.
ஒரு எலுமிச்சையளவு பிசைந்த மாவை எடுத்துக் கொண்டு எண்ணெய் தடவிய வாழையிலையில் தட்டி சூடான தோசைக்கல்லின் மேல் போடவும்.
கைகளால் லேசாகத் தூக்கிவிட்டு இலையை எடுத்து விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடியால் மூடி சுடவும்.

இரண்டாவது பக்கமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.⁠⁠⁠⁠


Spread the love
Tags:

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *